Wednesday, September 3, 2008


தமிழ்நாடு நாகரிகத்தில் சிறந்து விளங்கும் நகரத்து மக்களையும் நாகரிகமே இன்னதென்று தெரியாத எத்தனையோ பழங்குடி மக்களையும் கொண்டுள்ளது. பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள், சமய நம்பிக்கைகள், சமூக அமைப்பு, நுண்கலை இவற்றை அறிவதன் மூலம் தமிழ் நாட்டின் பழங்காலப் பண்பாட்டை அறிய வருகிறோம். தமிழ் நாட்டின் மலைபிரதேசங்களில் வாழும் பழங்குடிகளான தோடர் கோத்தர், படகர், இருளர், கசவர், காட்டு நாயக்கர், பணியர், குறும்பர், முதுவர், பளியர், பளிஞர், சோளகர், லிங்காயத்தார் காணிக்காரன், புலையர், மலசர், காடர், பச்சை மலையாளிகள், பஸ்தர், மண்ணான், ஏரவள்ளர், தொட்டிய நாயக்கர், லம்பாடியர் ஆகிய 23 முக்கியப் பழங்குடிகளைப் பற்றி இங்கே கூறப்படுகிறது. மேற்கண்டவர்களைத் தவிர அடியான், அரநாயடன், கம்மர், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், வலையர், குடியர், குரிச்சனி, குருமன், மலைய கருமான், கொச்சு வேலன், மலைக் குறவன், மலை அரயன், மலையன், மலை வேடன், முத்துவன், பன்றியன், பாளியன், உள்ளாடன், ஊராளி, விஷாவன் போன்றோரும் மிகவும் சிறுபான்மையினராக மலை பிரதேசங்களில் வசிக்கிறார்கள்?

இருளர்கள் ( Irulargal )

நீலகிரியில் வாழும் இருளர்களை மலைதேச இருளர்கள் என்றழைக் கின்றனர். இருளர் என்பது இருள் எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இவர்கள் நீலகிரி மாவட்டத்திலுள்ள பால்பனை, செம்பனாரை, கோழிக்கரை, மெட்டுக்கல், கண்டிபட்டி, அரக்கோடு, குஞ்சப்பனை, கள்ளம்பள்ளி, குடகூர், அல்லி மாயாறு போன்ற இடங்களில் வாழ்கின்றனர். கோயம்புத்துரில் அத்தப்பாடியிலும், ஆனைமலையில் சாடிவயலிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் செங்கல்பட்டிலும் வசிக்கிறார்கள். தர்மபுரி, விழுப்புரம், கடலுர், வேலுர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், செங்கல்பட்டிலும் வசிக்கும் இருளரை விறலியர் என்று அழைக்கிறார்கள்.

இருளர் தோற்றத்தில் அதிக உயரமில்லை. பெண்கள் ஆண்களை விட உயரம் குறைவு. இருளர் குடிசைகள் மூங்கில், ஓலைநார், புல், வாழைமட்டை, இவற்றால் கட்டப்பட்டுள்ளன. இவை சிறியவை. பத்தடி சதுரமுள்ளவை. குஞ்சுப்பனையில் உள்ள இருளர்கள் விவசாயக் கூலிகளாக உள்ளனர். மற்றும் ரப்பர், காபி, ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். கோயம்புத்துர் மாவட்டத்தில் அத்தப்பாடி பள்ளத்தாக்கில் வசிக்கும் இருளர்கள் மற்ற இடங்களில் உள்ள இருளர்களை விட வித்யாசமானவர்கள். இவர்களில் ஆண்கள் காதில் கடுக்கன், கையில் வெள்ளிக்காப்பு, இடுப்பில் ஆடை அணிகின்றனர். பெண்கள் முழங்காலுக்கு கீழ்வரை ஒரு துணியையும் மார்பை மறைக்க ஒரு துணியையும் அணிகின்றனர். ஆணும் பெண்ணும் பகிரங்கமாகப் புகை பிடிக்கின்றனர். அத்தப்பாடியில் இருளர் குழந்தைகளுக்கென ஒரு பள்ளிக்கூடம் உள்ளது.

கோயம்புத்துர் என்ற பெயரே கோயன் என்ற இருளனின் பெயரால் அமைந்ததாகும்.சத்தியமங்கலப் பகுதியை ஆண்ட இவன் ஒரு காலத்தில் பலம் வாய்ந்தவனாக இருந்திருக்கிறான். இன்றும் சத்தியமங்கலம் பகுதியில் இருளர்கள் வசித்து வருகின்றனர். இருளர்கள் பேசும் மொழி பழந்தமிழும், கன்னடமும் கலந்த மொழியில் அமைந்திருக்கிறது. இருளர்களிடையே இரண்டு அகமணப் பகுப்புகள் (endogamons groups) உள்ளன. கொப்புளிகை, குரள்கை, புங்கை, கொடுவன், கல்கட்டி, சாம்பன் தேவனள் போன்றவை உயர்ந்த பிரிவாகும். சோலைகர், வெள்ளைகர், உப்பலிகர், கரிந்திகர், லோரிகூர் போன்றவை தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவை. இருளர்களிடையே கடத்தல் மணமும், உடன்போக்குத் திருமணமும், பணிசெய்து திருமணம் செய்கின்ற வழக்கமும் இருந்தது. இப்போது பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறுகிறது. இவர்கள் கடைப்பிடித்து வந்த விதவைகள் மறுமணப் பழக்கமும் அருகி வருகிறது.

பருவமடைந்த பெண்ணை தனிக்குடிசையில் ஏழு நாட்களுக்கு வைத்திருக்கின்றனர். ஏழாவது நாளன்று தாய்மாமன் அக்குடிசையை எரிப்பான். அன்று அப்பெண் குளித்துப் புத்தாடை அணிவித்து விருந்துடன் சடங்கு முடிவடைகிறது. இருளர்கள் பிணத்தை எரித்து, சாம்பலைப் புதைத்து, அதற்கு மேல் கோயில் எழுப்பும் வழக்கம் உள்ளவர்கள். இதைக் கல்லெடுத்தல் என்பர். பங்குனி உத்திரத் திருவிழாவையும், மாவனள்ள (மாசி விழா) என்னும் விழாவையும் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மாசி விழாவில் ஆண்கள் தீமிதிக்கின்றனர். இதைப் பெண்கள் பார்க்க அனுமதிக்கப் படுவதில்லை. இதைத் தவிர மண், தழை, கொம்பு, இலைகளைக் கொண்டு தாங்களே செய்த பொம்மைகளைக் கொலுவில் வைத்து நவராத்திரி விழவையும் கொண்டாடுகிறார்கள்.

கசவர்கள் ( Kasavargal )

கசவப் பழங்குடி மக்கள் நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினிக்குடி, சிறுர், குண்டத்துப்பட்டி, அரக்கோடு, புளிஞ்சோறு, கதரப்பட்டி, அதரப்பட்டி, உதகரைப்பட்டி, இதியனப்பட்டி, ஜகலிகதவு, குத்தனபல்லி, மாயார், ஆனைக்கட்டி, தெங்குமரோடா முதலியப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் தடித்த உதடும் கூர்மையான கண்ணும், சுரண்ட மயிரும், கருத்த நிறமும் உடையவர்கள். பெண்களது முகம் வட்ட வடிவமாகவும் மூக்கு பந்து போன்றும் உள்ளது. பெண்கள் பெரும்பாலோர் சேலை கட்டுகின்றனர். வெள்ளி பித்தளையால் ஆன நகைகளையும் அணிகின்றனர். கசவர்கள் வாழும் குடிசைக்குச் சுவர் கிடையாது. சுவருக்குப் பதில் மூங்கில், காட்டுக் கம்பு முதலியவற்றை நட்டு மேலே கூரை வேய்ந்திருப்பர். கசவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழை மற்றும் காய்கறிகளைப் பயிரிடுகின்றனர். காட்டுப் பொருட்களைச் சேகரித்தும், தேன் எடுத்தும் வாழ்கின்றனர். காட்டு மிருகங்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்க மாடங்கள் அமைத்து அதன்மீது தங்குவதுண்டு. பெரும்பாலோர் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். எருமை இறைச்சியைத் தவிர எல்லா இறைச்சியையும் உண்கிறார்கள்.

கசவர் பேசும் மொழி எம்மொழியின் கிளையுமன்று. அது தனித்த மொழி, தென்திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது. இவர்களது பஞ்சாயத்துக்கு மூப்பனே தலைவன். இவர்களிடையே நடைபெறும் சண்டை சச்சரவுகளை இவரே தீர்த்து வைப்பார். இவர்கள் வணங்கும் விஷ்ணுவை ரெங்கசாமி என்று அழைக்கின்றனர். இவர்கள் பொங்கல் நாளை அறுவடை விழாவாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். உகாதி பூஜை, கார்த்திகை பூஜை போன்றவற்றையும் கொண்டாடுகிறார்கள்.

பெண்கள் பருவமடைந்தவுடன் தனிக்குடிசையில் வைக்கின்றனர். பன்னிரண்டாவது நாளன்று தாய்மாமன் இக்குடிசையின் முன்புள்ள பந்தலை அழித்து விடுவான். அப்பெண் குளித்துப் புத்தாடை அணிவாள். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே பெரும்பாலும் நடைபெறுகிறது. மாப்பிள்ளை மணப்பெண்ணின் பெற்றோருக்கு ஆடைகள் கொடுக்கும் நிகழ்வுக்கு பால்கூலி என்று பெயர். மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டியபின் விருந்தும் நடனமும் நடைபெறும். அண்ணன் இறப்பின் அண்ணியைத் திருமணம் செய்யமாட்டார்கள். தம்பி இறப்பின் தம்பி மனைவியை அண்ணன்மார்கள் மணந்து கொள்ளலாம். மனைவியை இழந்தவர்களும் விவாகரத்து பெற்றவர்களும் மறுமணம் செய்து கொள்ளலாம். இறந்தவர்களைப் புதைத்து அதன் மீது கல் வைக்கின்றனர். அதற்குக் கோட்டைக்கல் என்று பெயர். ஆண்டு தோறும் அதற்கு பூஜை நடத்துவர்.