Sunday, September 28, 2008

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய இரண்டு நாள் பயிற்சி






தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய தகவல்கள் எட்டாத, எந்த செல்போனுக்கும் டவர் கிட்டாத கிராமங்களில், தட்டுத்தடுமாரி, எட்டோ, பத்தோ, படித்துவிட்ட ஆதிவாசி பசங்களுக்கும், பெண்களுக்கும் அத்துப்படியாக தெரிந்திருக்கிறது என்றால், நமக்கு கொஞ்சமல்ல நிரையவே ஆச்சரியம் பொத்துக்கொள்ளுமா கொள்ளாதா நிச்சயமாக அப்படித்தான்

என்ம்சிடி ஆதி திட்டம் மூலமாக ஒரு முயற்சியாக நமது பசங்களுக்கும் பெண்களுக்கும் இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய வகுப்பை எடுக்கும் பொறுpu வழக்குரைஞர் ஆனந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது அவர்தான் கோவையில் இன்னக்கி இதில் நல்ல எக்ஸ்பெர்ட் ஆன இளசு. ரொம்ப அர்பணிப்புள்ள ஒரு நண்பர்

அவ்வளவுதான் மனிதர் படு சுறுசுறுப்பாகிவிட்டார் உடனே பயிற்சிக்கு வருபவர்கள் பற்றிய சில கிரிட்டீரியாக்களை கொடுத்து இதன்படிதான் பயிற்சி நடக்கவேண்டும் இப்படிப்பட்டவர்கள்தான் பயிற்சியில் கலந்துகொள்ளவேண்டும் இல்லையென்றால் நான் வரமுடியாது என்று ஒரேபோடாய் போட்டுவிட்டு நடந்துபோய்விட்டார்

அதன்படி படித்த இளைஞர்களையும் ஓரளவு எழுதத்தெரிந்த இளசுகளையும் இணைத்து பட்டியலை களப்பணியாளர்கள் சுமதியும் செல்வனும் டிக்செய்து தகவல் கொடுத்துவைத்தனர்

சொன்னவுடன் பட்டிசாலை செயப்பிரகாசும் வெற்றியும் வேகமாகிவிட்டனர் அதன் விளைவுகள் பற்றியும் விவாதிக்க தொடங்கிவிட்டனர்

ஆனந்தன் அவர்கள் கொடுத்தநாள் நம்ம பசங்களுக்கு ஒத்துவராத நாளாய் இருந்ததது. அவரிடம் சொன்னேன் உங்களுக்கு சவுகரியமான நாள் ஒன்றை குறித்து தாருங்கள் நான் வருகிறேன் என்றார், வண்டி ஏதாவது அரேஞ் செய்யனுமா ? அதுமாதிரி என்னை யாரும் வாழ்கையில் முறைத்ததில்லை. ‘சாரி’ சொல்லிவிட்டு தேதியையும் முகவரியையும் கொடுத்துவிட்டு வண்டியை கிளப்பிவிட்டேன்

சரியாக 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு மனுசன் பயிற்சிநடக்கும் கோபனாரிக்கே வந்துவிட்டார்,ஆனால் பசங்கள் 10.30க்குத்தான் வந்தார்கள் என்பது வேறுவிசயம் இடைப்பட்ட நேரத்தில் எல்லாம் பேசினார் திட்டங்களை கேட்டறிந்தார் சில தொடர்புகளை கொடுத்தார் ஊரில் உள்ள பிரச்சனைகளை அலசினார்

சரியாக பத்து முப்பதுக்கு உள்ளே வந்தவர் சாப்பிடும்வரை இளசுகளை தன் வகுப்பால் கட்டிப்போட்டார் அனுபவங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வரலாறு, அதில் கிடைத்த வெற்றிகள், தடைகள் மேல்முறையீடு ஆகியவை பற்றி மிகவும் எளிமையாக செயல்படுத்திக்காட்டினார்

பின் பங்கேர்ப்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளங்கும் வண்ணம் பதில் கொடுத்தார்

மதிய சாப்பாட்டை பங்கேற்ப்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உற்சாகமளித்தார்

பின் பேக்கில் இருந்து மாதிரி படிவங்களை எடுத்து குழுவாகப்பிரித்து கொடுத்து நிரப்பசொன்னார் அதில் ஏற்ப்பட்ட தவறுகளை சுட்டிக்காடினார் சிலவற்றில் உள்ள நுணுக்கமான பிழைகளை சுட்டி அது எவ்வாறு நமக்குதேவைப்படும் தகவல் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று விளக்கினார்

* தகவல் படிவத்தில் நீதிமன்ற வில்லை (கோர்ட்ஸ்டாம்)10 ரூபாய்க்கு ஒட்டப்படவேண்டும்

* எப்போதும் தகவல்கள் கேட்கும் போது அன்றைய நாள் வரை உள்ள தகவல்களை கேட்கவேண்டும்

* எதிர்காலத்தில் எப்போது நடக்கும் என்பது போன்ற தகவல்களை கேட்ககூடாது (உம் :எப்போது பாலம் கட்டுவீர்கள்) அதற்க்கு பதிலாக பாலம் கட்ட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்கலாம்

* தகவல் முப்பது நாட்களுக்குள்அச்சு வடிவில் தரப்படவேண்டும்

* அதிகாரி தகவல் தர தவறினால் 31 ஆம் நாளில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூபாய் 250 அபராதம் கட்டவேண்டும் இது மொத்தமாக 25000த்துக்கு மிகாமல் இருக்கும்

* தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் இன்னொரு சாதகம் நாம் தகவல் கோரும் அதிகாரியிடம் நாம் கேட்கும் தகவல்கள் இல்லையெனில் அவரே அது சம்பந்தப்பட்ட துறைக்கு forward செய்துவிட்டு நமக்கு தகவல் அளிக்கவேண்டும் நீங்கள்
பெற விரும்பும் தகவல் இன்னொரு அரசு அலுவலகம் சார்ந்தது எனில், தகவல் லுவலரே உங்களது விண்ணப்பத்தை உரிய இடத்திற்கு அனுப்பி வைப்பார். இது ஐந்து நாட்களுக்குள் செய்யப்படும்
.

* தகவல் மேல்முறையீட்டு அலுவலர்களும் இதில் உள்ளனர்

* நீங்கள் அத்தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்கும் உரிமை பொது தகவல் அலுவலர்க்குக் கிடையாது

* இரண்டாம் முறையீடு முதல் முறையீட்டின் முடிவு எடுக்கப்பட்ட
தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள்ளும் செய்ய உரிமை உண்டு.

* நீங்கள் பெற விரும்பும் தகவல் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் உட்பட தகவல் உரிமை சட்டம் பிரிவு 8 மற்றும் 9 களில் விலக்களிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றியெனில் உங்கள் விண்ணப்பம் தகுந்த காரணங்களை விளக்கி நிராகரிக்கப்படும்

* அரசு ஆணை (GO) எண்கள் 1042, 1043, 1044, மற்றும் 1045 களின் படி, குற்றப்புலனாய்வுத்துறை, தனிப்பிரிவு, பாதுகாப்புப்பிரிவு உட்பட 30 அரசு அலுவலகங்களை, தகவல் உரிமைச் சட்டம் மூலமாக, தகவல் பெற அணுக முடியாது.

முதல் நாள் இச் ச்ட்டத்தின் வரலாறும் அனுபவங்களையும் கொண்டு நகர்த்திய ஆனந்த ராஜ் இரண்டாம் நாள் முழுக்க செயல் முறைகளை கையாண்டு அவர்களுக்குள்ளும் பல ஆனந்தராஜை உருவாக்கிவிட்டார் இரண்டு நாட்கள் மிகப்பயனுள்ளதாக இருந்த்தாக இளசுகள் மிகவும் புளகாங்கிதம் அடைந்தது மட்டுமல்லாது செயலில் இறங்கினர்

Tuesday, September 16, 2008

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6ன் கீழான விண்ணப்பம்


தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6ன் கீழான விண்ணப்பம்


தகவல் கோருபவர்

பெயர் மற்றும் முகவர் ;


தகவல் தரும் அலுவலர் : பொது தகவல் அதிகாரி

பெயர் மற்றும் முகவரி :பதவி--------------------------------------------------------

:துறை அலுவலக முகவரி-----------------------------



கோரப்படும் தகவல்கள்


கோரப்படும் தகவல்கள் ------------------------ வரை உள்ள நிலவரப்படி கோரப்படுகிறது

1)

2)

3)

மேற்க்கண்ட தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் கீழ் தமிழில் அச்சுவடிவில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

இடம்

தேதி

குறிப்பு

மேற்க்கண்ட தகவல்களை பெர்ற தகவல் அரியும் உரிமைச்சட்டம்-2005 கீழ் ரூபாய் 10க்கான நீதிமன்ற முத்திரக்கட்டண வில்லை {court fee stamp} விண்ணப்பத்தின் முகப்பில் ஒட்டப்பட்டுள்ளது


விண்ணப்பிப்பவர் கையொப்பம்

Monday, September 15, 2008

ஊர் மூப்பன், வண்டாரி, குறுதலை ,மண்னுக்காரன் ,ஆகியோருக்கான கவுன்ஸிலை உருவாக்கும் கூட்டம்










ஊர் மூப்பன், வண்டாரி, குறுதலை, மண்னுக்காரன், ஆகியோருக்கான கவுன்ஸிலை உருவாக்கும் கூட்டம் கடந்த 13 14 ஆகிய தேதிகளில் கோபனாரி குருஞ்சி கட்டிடமையத்தில் நடைபெற்றது இதில் 10 ஊரிலிருந்து 40தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக தங்களது பங்களிப்பை செலுத்தினர். சங்கரநாரயணன், மற்றும் செல்வதேவன், ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், ஆகியோர் இக்கூட்டத்தை வழிநடத்தினர். இரண்டுநாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர்களுக்கென்று ஒரு கவுன்சில் உருவாக்குவதென்று முடிவுசெய்யப்பட்டது. மேலும் பழைய அதிகாரங்களை மீட்டு அதை அமுல்படுத்துவதென்றும் முடிவுசெய்யப்பட்டது.

இப்படியொரு அமைப்பை ஏற்படுத்தும் எண்ணத்தை தந்த என் எம் சி டி ஆதி திட்டத்துக்கு, புதுக்காடு மூப்பன் காரை நன்றி தெரிவித்தனர். இது மிக அவசியம், இது எங்களுக்கு பலத்தை கொடுத்துள்ளதாக சீங்குழி வண்டாரி தெரிவித்தார்.

பின் ஊரின் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைத்து அவற்றை விவாதித்தனர்

வனச்செட்டில்மெண்டுக்குள் உள்ள கிராமங்களின் பிரச்சனைகளை தீர்க்க ரெவின்யூ கிராமங்களும், ரெவின்யூ கிராமங்களில் உள்ள பிரச்சனைகளி தீர்க்க செட்டில்மெண்ட் கிராமங்களும், ஒத்துழைக்கவேண்டும் என்று பட்டிசாலையின் மூப்பன் காளி விவாதத்தை தொடங்கிவைத்தார்

ஒன்று: கூடப்பட்டி மூப்பன் 25 வருடமாக மின்சாரமிலாமல் பாம்புகளோடும், பூரான்களோடும் வாழ்க்கை நடத்துவதாகவும் ,குழந்தைகள், பள்ளிப்பாடங்களை படிக்ககூட முடியவில்லை, சுற்றிலும் ஆறு வற்றாமல் ஓடுகிறது ஆனால் அதை எடுத்து விவசாயம் செய்ய முடியவில்லை, ஆகவே விரைவில் மூன்று பேஸ் கரண்டுக்கு ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியரை சந்திக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்

மேலும் ட்ரேக்டர் வழங்கியுள்ள வனத்துறைக்கும், தங்களை அன்போடு நடத்தும் மாவட்ட வன அலுவலர் அன்வர்தீனுக்கும் நன்றி தெரிவித்து, அவர் மாதிரி நல்லமனிதர்கள் இருந்தால் எல்லா பிரச்சனைகளும் சீக்கிரம் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்

புதுக்காடின் காரை மூப்பன் தங்கள் ஊருக்கு ஒரு 10 hrs மோட்டர் இருந்தால் மற்றவற்றை நாங்களே சமாளித்துக்கொள்ள முடியும் என்று முடித்தார்

சீங்குழி மூப்பனும் வண்டாரியும் ரோடு வசதி சேங்ஷன் ஆகியும் அது ஏனோ முடிக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டார்

ஆலங்கண்டி மூப்பன் மருதனோ எங்கள் ஊரில் 44 வீட்டிற்க்கு மின்சாரவசதி செய்துதரப்படவில்லை அது முடிக்கப்பட மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டுமென்றார்

கோபனாரி குடுமியும் மூப்பன் லட்சுமணனும் மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மின் வசதிக்கு அறவழியில் போராடப்போவதாக தெரிவித்தனர்

கொரவண்கண்டி குடிநீர்வசதியிம் பள்ளிகூட பசங்களுக்கு சாதி சான்றிதழும் விரைவாக ச்ய்யவெண்டும் என்றார்

சொரண்டி காளிமூப்பன் குடித்தண்ணீருக்கே தினமும் 3 கிலோ மீட்டர் நடக்கவேண்டியுள்ளது பட்டுவளர்சித்துறையால் அளிக்கப்பட்ட மோட்டாருக்கு நாங்கள் பில்கட்டவேண்டுமென்று மின்வாரியத்தனர் பீஸ்கட்டையை ப்டுங்கிப்போய்விடார்கள் என்று நா தழுக்க பேசிமுடித்த போது கூட்டம் அமைதியானது

பட்டிசாலையின் மூப்பன் தங்களூருக்கு ஒரு பால்வாடியும் தண்ணீர் வசதியும் வேண்டுமென்று கோரிக்கையை வைத்தார்

இப்படி தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை விவாதித்தனர்

· மூப்பன்ஸ் கவுன்சிலை மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை கூட்ட வேண்டும்

· இதை முறையாக அரசில் பதிவு செய்யவேண்டும்

· வனத்துறை திட்டங்கள் கொண்டுவரும்போது ஊர் மூப்பன்களை கலந்தாலோசிக்கவேண்டும்

· மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் விரைவாக கொடுக்கப்படவேண்டும்

· வனமகசூல் ஏலங்களில், வனத்துக்குள் கட்டப்படும் கடுமானப்பணிகளில் ஆதீவவசிகளுக்கு முன்னுரிமை தரப்படவேண்டும்

· மாட்டுச்சாணங்கள் சேகரித்து அவற்றை நாமே விற்பனை செய்யவேண்டும்

· வெள்ளாமையை வட்டிக்காரர்களிடம் இழந்துவிடாமல் இருக்க ஒரு விதை வங்கியை உருவாக்கி நாமே நடத்த வேண்டும்

· தோலம்பாளையம் வெள்ளியங்காடு ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள ஆதிவாசிகள் கிராமங்களை உள்ளடக்கி ,ஒன்றாக்கி ஒரு ஆதிவாசிகள் பஞ்சாயத்தை அரசு அறிவிக்கவேண்டும்

· வனசட்டத்தை அமுல்படுத்தவேண்டும்

· யானைகளிடம் இருந்து விளைச்சலை காக்க டிச்சு(அகழி) அல்லது குறைந்த மின்னழுத்தமுள்ள மின்சாரவேலிகளை அரசு அமைத்துக்கொடுக்கவேண்டும்

· பெரும்பாலும் தண்டணைக்காக இப்பகுதிக்கு ஆசிரியர்கள் மாற்றப்படுவதால் குழந்தைகளுக்கு தனிப்பயிர்சி அளிக்க அரசு உதவ வேண்டும்

மிகவும் சாதரணமான, நியாயமான,மிக அடிப்படையான கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர்இந்த ஆதிவாசி தலைவர்கள் . இவற்றை அரசு மிக எளிதாக செய்யமுடியும், இவற்றை தனியார் கம்பனிகளைக் கூட CSP component ல் செய்யவைக்க அரசால் முடியும், செய்யுமா இந்த அரசு?



களப்பணியாளர்கள் செல்வன் மற்றும் சுமதி கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்

Sunday, September 14, 2008

செப்டம்பர் மாத நிகழ்வு கலை இரவு - இரண்டு நாள் தீம் பயிற்சி










s
மின்சார தடைகளையும் பொருட்படுத்தாது மெழுகுவர்த்தி உதவியோடு இரவுபகலாக ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் பயிற்சியாளர் மாசானதுரை மற்றும் சுமதி ,செல்வன் ஆகியவர்களின் முயற்சியில் மிகச்சிறப்பாக தொடங்கி இலக்கை எட்டியது தீம் பயிற்சி
மிக சரியான சமயத்தில் ஆதி திட்டத்தின் உதவியோடு பழங்குடி இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட இப்பயிற்சியில் முப்பதுக்கும் மேற்ப்பட்ட எண்ணிக்கையில் இளைஞர்கள் கல்ந்துகொண்டு ஆதிவாசிமக்களின் வரலாற்றை அவர்களுடைய நடனம் வாயிலாக உணர்த்தி ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கிவைத்தனர். இது மிகப்புதிய முயற்சி எங்கள் மக்களை இப்படி பக்குவப்படுத்தியது ஆச்சரியமளிப்பதாகவும் வித்தியாசமாகவும் உணர்சிபூர்வமாகவும் இந்த நடன நாடகம் இருப்பதாய் பார்வையாளராக வந்திருந்தவர்கள் பாராட்டினர். ஏற்கனவே மிகச்சிறப்பாக இயங்கிவரும் ஆதிகலைக்குழு கூர்மையாக தனது நிகழ்வுகளை கொண்டு செல்ல இப்பயிற்சி நிச்சயமான உதவும்
உங்கள் பகுதிகளின் திருவிழக்களுக்கு ஆதி கலைக்குழுவை அழைத்து ஒரு கலையை, இனத்தை அழிவில் இருந்து மீட்க உதவி புரியுங்கள்



Friday, September 5, 2008

ஊராட்சி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளில்
27ஆவது கடமை - தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாடு
  • ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான திட்டங்களை அந்த துறையினரோடு சேர்ந்து நிறைவேற்றுதல்.

  • ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான சுடுகாடுகளை அமைத்தல்.

  • . வீட்டு வசதியினை உருவாக்கித் தருதல்.

  • இவர்களுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல்.

  • கலப்புத் திருமணங்களை ஆதரித்து ஏற்பாடு செய்தல்.

  • இவர்களுக்கு சிறு வியாபாரங்களை ஏற்பாடு செய்தல்.

  • இம்மக்களுக்கு சமுதாயக் கூடங்கள் கட்டுதல்.

  • இம்மக்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டங்களான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்துதல்.

  • பிணைத் தொழிலாளர்களை விடுவித்து மறுவாழ்வு தருதல்.

  • இம்மக்களின் கல்வித்தரம் ஆராயப்பட்டு உயர்த்தப்படுதல்.

  • இம்மக்களின் குழந்தைகளில் பள்ளி இடைநிற்போர் எண்ணிக்கைகளைக் குறைத்தல்.

  • இச்சமூக சிறுவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு திட்டங்கள் வகுத்து நிறைவேற்றுதல்.

  • இதற்கென சிறப்புப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்துதல்

  • இச்சமூக மக்கள் படிக்கும் பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு ஒன்றிய நிர்வாகத்திற்கு உதவி செய்தல்.

  • இச்சமூக மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பயனாளிகளை தேர்வு செய்தல்.

  • புதிய பள்ளிகள், மாணவர் விடுதிகள் ஏற்பாடு செய்தல், விடுதிகளை ஆய்வு செய்தல்.

  • புதிய வீட்டு மனைகள் வழங்க ஏற்பாடு செய்து, இடம் ஒதுக்கித்தருதல்.

  • தெருவிளக்குகள் ஏற்பாடு செய்தல்.

  • இம்மக்களை தொழில் முனைவோராக்குவதற்குப் பயிற்சிகள் ஏற்பாடு செய்தல்.

  • இம்மக்களை வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்துதல். இம்மக்கள் எல்லா பொது இடங்களிலும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்தல்.

  • ஊர் மக்கள் அனைவருக்கும் இந்த சமத்துவ மனநிலை ஏற்பட பாடுபடுதல்.

  • பஞ்சமி நிலங்களை மீட்டுத் தருதல்.

  • பிணங்களை தூக்கிச் செல்லுதல், பறை அடித்தல், பிணக்குழி தோண்டுதல் போன்ற வேலைகளை இம்மக்களே செய்ய வேண்டும் என்ற சமூக வற்புறுத்தலை தவிர்த்தல்.

  • நில உச்சவரம்பு சட்டத்தினால் இம்மக்களுக்கு பயன் கிடைக்க வகை செய்தல்.

  • கிராம சமூக ஒத்துழைப்போடு தீண்டாமை ஒழிப்பை உறுதிப்படுத்துதல்.

  • தொண்டு நிறுவனங்களை இப்பணிக்கு ஈடுபடுத்துதல்.


  • மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழி செயலை தவிர்த்தல்.

  • தற்போதுள்ள பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேற்பார்வையிட்டு தரம் பராமரித்தல்.

  • முதலமைச்சரின் சிறப்பு விருதுகள் பெறுவதற்கான மாணவர்களை அடையாளம் கண்டு உதவுதல். . 

'பழங்குடியினர் இனி காடுகளில் வாழ முடியாது’---- மகாஸ்வேதா தேவி


வங்கப் பெண் எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, ஓர் இலக்கியப் படைப்பாளியாகவும், பழங்குடி மக்களின் உரிமைக்காகப் போராடும் ஓர் இயக்கவாதியாகவும் தீரமுடன் செயல்பட்டு வருகிறார். 1926 இல் பிறந்த இவரது வாழ்க்கை, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம், இந்திய விடுதலைக் காலம், 50 ஆண்டு பின்காலனித்துவ காலம் என நீள்கிறது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், எவ்வாறு தலித் போராளிகளின் பங்களிப்பு மறைக்கப்பட்டதோ, அவ்வாறே பழங்குடியினரின் தியாகங்களும் மறைக்கப்பட்டன என்று இவரது படைப்புகளில் சுட்டிக்காட்டுகிறார். வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வனச்சட்டங்கள் என்ற பெயரில் பழங்குடி மக்களிடமிருந்தே நலங்களையும் வளங்களையும் பிடுங்கி, அதற்குப் பதிலாக அவர்களுக்கு நலமோ, இழப்பீடோ வழங்காமல் அவர்களை நாடோடிகளாக அலையவிடும் இந்திய அரசின் செயல்பாட்டையும், இதனால் பழங்குடி மக்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு வருவதையும் தமது எழுத்தில் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இவர் "தெகல்கா' ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியை இங்கு வெளியிடுகிறோம்.
தமிழில் : பூங்குழலி

அண்மையில் திருத்தப்பட்ட பழங்குடியினர் வன உரிமைகள் சட்டம், பழங்குடியின மக்கள் தற்போது அனுபவிப்பதைவிட அதிக உரிமைகளை அளிக்க முற்படுகிறது. அவர்களின் வாழ்வு மேம்பட அது உதவுமா?

நான் மக்களிடம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன் பழங்குடியினரிடமும், பிறரிடமும். மேற்கு வங்காளம், பீகார், இன்றைய ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் வேறெங்கிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் செல்கிறேன். அதில் கண்டிப்பாக, பழங்குடியினர் அல்லது பின்னர் பழங்குடியினராக அறிவிக்கப்பட்டவர்கள்தான் எனது கவனத்தை ஈர்த்தனர். முதலில் நான் இரண்டு சான்றுகளை அளிக்கிறேன். அந்தமானின் "ஜாரவா'க்கள் மரபாக உணவு சேகரிப்பவர்கள். தேன் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக இருந்தது. தேனை சேமிக்க மரத்தைக் குடைந்து பெரிய பெரிய பீப்பாய்கள் செய்து, அதை மரத்தின் அடியில் புதைத்து வைப்பார்கள். ஒரு முறை வெளியாட்கள் - நான் அந்த சொல்லைத் தெரிந்தேதான் பயன்படுத்துகிறேன் - பீப்பாய்களைத் தோண்டி எடுத்து தேன் அனைத்தையும் களவாடி விட்டனர். "ஜாரவா'க்கள் மிகுந்த ஆவேசமடைந்து அவர்களின் குடிசைகளை எரித்துவிட்டனர். ஆனால், ஜாரவாக்கள் செய்ததாகச் சொல்லப்படும் "அட்டூழியங்கள்'தான் ஊடகங்களில் வெளிவந்தது.

அந்தமானின் அதிமுக்கிய நெடுஞ்சாலை, ஜாரவாக்களின் இதயப்பகுதி வழியாகச் செல்கிறது. இதனால் இப்போது வாகனங்கள் எளிதாக அந்தப் பகுதிகளில் நுழைய முடிவதால், இந்தப் பழங்குடியின ருக்கு வேறு வகையான உணவுகள் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால், அந்த மாதிரியான உணவுகளைத் தாங்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அவர்களிடம் இல்லை. அவர்களது உணவு முறை பழங்கள், வேர்கள், தேன் போன்ற இயற்கை உணவு மட்டுமே. அதனால் அவர்கள் துன்புற்று இறக்கின்றனர். அதற்கு எதுவும் செய்யப்படவில்லை. உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான குடிகள் அந்தமானில்தான் இருக்கின்றனர் என்பது, இந்த உலகின் கவனத்தில் இல்லை. இது, எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது.

அவர்களுக்கு இயற்கையைப் பற்றித் தெரியும். அவர்கள் கடலை ஆய்கின்றனர். தங்கள் காடுகளைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கின்றனர். ஆனால், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நாம் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் சோகம் என்னவெனில், நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க செல்கிறோம்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள அல்ல. சுனாமியின் போது, "ஜாரவா'க்களுக்கு மட்டுமல்ல, பிற பழங்குடியினருக்கும் கடலின் நிறம் மாறியதன் பொருளும் தெரிந்திருந்தது. அலையின் திசையில் ஏற்பட்ட மாற்றங்களை எல்லாம் சரியாகப் புரிந்து கொண்டு, அவர்கள் குன்றுகளின் மீது ஏறிக் கொண்டனர். அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் இறக்கவில்லை. ஆனால், பிறர் இறந்தனர். இது ஒரு சான்று.

மற்றொரு சான்று "கார்கு'கள் பற்றியது. அவர்கள் காட்டுவாசிகள். ஒரு காலத்தில் மேற்கு மகாராட்டிரத்தில் அவர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர். பிரிட்டிஷார் இருப்புப் பாதைகள் கட்டியபோது, நாசிக் முதல் அவுரா வரை இருப்புப் பாதையிட பல பழமையான தேக்கு காடுகளை அழித்தனர். பெரும் எண்ணிக்கையில் இருந்த "கார்கு'கள் காடுகள் அழிக்கப்பட்டதால், திடீரென தங்கள் உணவு, மருந்து என அனைத்து ஆதாரங்களையும் இழந்ததை உணர்ந்தனர். நான் அவர்களைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அரசு "கார்கு'களை மகாராட்டிரத்தில் உள்ள அமால்னெரில் குடியமர்த்த முயன்றது. ஆனால், "கார்கு'களுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால் அவர்கள் இயற்கையாக அதனோடு பொருந்தவில்லை. விளைவு, பிறர் அவர்கள் நலங்களை எடுத்துக் கொண்டனர்! கார்குகள் பெருமளவில் துன்புற்றனர். பெரும்பாலானோர் அழிந்து விட்டனர். அவர்கள் இப்போது முற்றிலும் அழிந்து கொண்டிருக்கும் ஒரு பழங்குடியினர். ஏனெனில், அவர்களுடைய காடுகளை அவர்கள் இழந்துவிட்டனர்.

ஆக, காடுகளைப் பற்றி யார் நன்கு அறிந்திருக்கிறார்களோ, யார் காடுகளைப் பராமரிக்கிறார்களோ, யார் காடுகள் தழைத்து வாழ உதவுகிறார்களோ, அம்மக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள முயல்வதே இல்லை. நாம் அவர்களையோ, அவர்கள் பழக்கவழக்கங்களையோ, பண்பாட்டையோ மதிப்பதில்லை. அவர்களிடமிருந்து காடுகள் களவாடப்படுகின்றன.

இச்சட்டத்தை விமர்சிப்பவர்கள், காட்டுவாசிகள் தங்கள் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி காடுகளை அழித்து விடுவர் எனக் குற்றம் சுமத்துகிறார்களே?

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஜால்பாய்குரியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்குச் சென்றபோது, அங்கு காட்டுவாசிகளான பழங்குடியினர் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவர்களுக்கு பஞ்சாயத்து வசதிகள் எதுவும் தரப்படவில்லை என்பதையும் கண்டேன். சாலைகள் இல்லை. மின்சாரம் இல்லை. பள்ளிகள் இல்லை. ஏனெனில், அவர்கள் காட்டுவாசிகள். இம்மாதிரியான அநீதி பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

எங்கள் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திலும் புரூலியா, பங்குரா, மேற்கு மேதினிபூர் மற்றும் வடக்கு வங்கத்தின் பாரிய பகுதிகளில் காடுகள் காணப்படுகின்றன. ஆனால், அவைகளில் எதுவும் மிஞ்சவில்லை. அவை சுரண்டுபவர்களால் "வன தேகெதர்கள்' அல்லது உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் வனத்துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டன அல்லது விற்கப்பட்டன. கடந்த 30 - 40 ஆண்டுகளாக மரத்தாலான வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஜார்கார்ம் காடுகள் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதை நான் காண்கிறேன்.

ஜார்கார்ம் காடுகளின் அருகே ரயில் வண்டிகளை நிறுத்தி, பெரும் எண்ணிக்கையில் தேக்கு மற்றும் சால் மரங்கள் ஏற்றப்படும் காலம் இருந்தது. அது, பழங்குடியினர் வேலை அல்ல. தங்களது சொந்த வாழ்வாதாரத்தை அவர்கள் அழிக்க மாட்டார்கள். மேலும், எந்தப் பழங்குடியினருக்கும் ஒரு வண்டி நிறைய மரத்துண்டுகளை எடுக்கும் அளவிற்குத் திறனோ, அதிகாரமோ, பணமோ கிடையாது. இந்தியா முழுவதிலும் பரவலாக காடுகள் அழிக்கப்படுகிறது என்றால், அது பழங்குடியினரால் அல்ல.

நிலைமை நீங்கள் விவரித்தபடி இருக்க, எந்தவொரு சட்டத்தாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

'லோதா'க்கள் தாங்கள் மரம் வெட்ட வற்புறுத்தப்படுவதாக என்னிடம் கூறிய காலம் ஒன்று இருந்தது. நான் ஒரு பழங்குடியின மனிதரிடம் கேட்டேன். நீங்கள் காட்டுவாசிகள், நீங்கள் வன தேவதையை வணங்குபவர்கள், நீங்கள் எப்படி இதைச் செய்யலாம்? அவர் என்னிடம் பதிலுரைத்தார் : அம்மா, எங்களுக்கு ஒரு நாளைக்கு அய்ந்து ரூபாய் தேவைப்படுகிறது. என்னை மரம் வெட்டச் சொல்லுங்கள், நான் வெட்டுகிறேன். யாருடைய தலையையாவது வெட்டச் சொல்லுங்கள், வெட்டுகிறேன். அவர்கள் மனிதத் தலைகளை வெட்டுகிறார்கள் என்று சொல்லவில்லை. அது, அவர்கள் நிலையை வெளிப்படுத்துகிறது.

நீங்கள் நினைக்கலாம், மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் நேரடியாக வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் என்று. ஆனால், அப்படி இல்லை. உள்ளூர் அரசியல்வாதிகள், பஞ்சாயத்தார், அரசியல் கட்சிகள், இவர்களைத் தவிர வெவ்வேறு வடிவங்களில் வரும் அரசு எந்திரங்கள் என இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவோர் பலர் உள்ளனர். அவர்கள் ஊரக வளர்ச்சி அதிகாரியிடம் செல்வர். அவர் இங்கு இல்லை. அங்கு செல்லுங்கள் என்பார். இப்படியே போய்க் கொண்டேயிருக்கும். ஒரு சான்றுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நல்லதுதான். ஆனால், எதைப் பற்றியும் எதுவுமே தெரியாதவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துவார்கள்? இப்பொழுது ஒரு புதிய சட்டம் வருகிறது. அச்சட்டத்தின் பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கு யாரிடம் செல்ல வேண்டும் என்பதோ, இச்சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோ எப்படித் தெரியும்?

பழங்குடியினர் காடுகள் பாதுகாப்புச் சட்டம் மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால், காடுகள் எங்கே இருக்கின்றன? அப்படியே அவை இருந்தாலும், மக்கள் எங்கே இருக்கின்றார்கள்? பழங்குடியினருக்கு உண்மையிலேயே காடுகள் மீது ஏதேனும் உரிமை இருக்கிறதா? நாம் இந்தியாவில் ஓர் இயற்கை காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து பழங்குடியினரிடம் ஒப்படைத்து, அவர்களை அதைக் கொண்டு வாழச் சொன்னால், இன்றைய பழங்குடியினரால் முடியும் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர்கள் வாழ்க்கை முறை அழிந்துவிட்டது. இப்போது அவர்கள் அறிந்ததெல்லாம் பழமொழிகள் மற்றும் சடங்குகள் மூலம் அறிந்து கொண்ட வெறும் வாய்மொழி மரபு மட்டுமே. பல தலைமுறைகளாகத் தொடர்ந்த காடுகள் அழிப்புக்குப் பிறகு, காடுகளையோ மரங்களையோ பார்த்திராதவர்கள் காடுகளை வைத்து வாழ முடியும் என எதிர்பார்க்க முடியாது.

நான் 1970களில் இருந்து பலமாவுக்குப் போய் கொண்டிருக்கிறேன். தல்தோகன்ஞ்சுக்கு செல்லும் சாலை அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டிருந்தது. பலமாவுக்கு அருகில் இருக்கும் புருலியாவிலும் அதே நிலைதான். ஒரு காலத்தில் அந்தக் காடுகளில் லாக் வகை மரங்கள் நிறைந்து காணப்பட்டன. லாக் மரம் இசைத்தட்டுகள் செய்யப் பயன்படுத்தப்பட்டது. அதனால் அதற்கு மிகுந்த தேவை இருந்தது. இந்தியாதான் லாக் மரத்தை உலக சந்தைக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்தது. கிட்டத்தட்ட உலகின் 50 விழுக்காடு தேவையை இந்தியா நிறைவு செய்தது. இந்தியாவில் விளைவிக்கப்பட்ட லாக் மரங்களில் 50 விழுக்காடு பலமாவ், புருலியா என்ற இந்த இரு மாவட்டங்களிலிருந்துதான் வந்தன. தற்போது பலமாவ் பொட்டலாகி விட்டது. நான் அங்கிருந்த கொத்தடிமைகளிடம் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவர்கள் சொல்வார்கள், "காடுகள் உள்ள வரையில் நாங்கள் இருப்போம்; நாங்கள் உயிருடன் இருப்போம். தற்போது காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. நாங்களும் இறந்து விட்டோம்.' பழங்குடியினர் காடுகளை ஆயிரக்கணக்கான வழிகளில் பயன்படுத்துவர். ஆனால், காடுகளை அழித்து அவர்கள் எதையும் செய்வது இல்லை. காடுகளை எவ்வாறு மனித சமூகத்திற்கு உதவுமாறு பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.

பழங்குடிகளுக்கு நாடு முழுவதிலும் உள்ள காடுகளில் எதுவும் சொந்தமில்லாத நிலையில், அவர்கள் கையில் எவ்வித காட்டுப் பகுதியும் இல்லாத நிலையில், அவர்களுக்கு காடுகள் மீது எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில், இப்பொழுது ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். எல்லாம் வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். ஆம்பர் மரங்கள் நிறைந்த காடு பங்குரா. இருப்புப் பாதைகள் இந்த ஆம்பர் மரங்களின் மீதுதான் அமைக்கப்படுகின்றன என்று நான் எப்போதோ செய்திகளில் படித்த நினைவு. அவைகளின் சரியான பயன்பாடு உள்ளூர் மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த மாவட்டமே செழித்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவேயில்லை.

நமது காடுகள் மிகுந்த செழிப்பானவை. இன்று உலகெங்கிலும் மிகுந்த தேவை ஏற்பட்டிருக்கும் மூலிகை மருத்துவம் பழங்குடியினர் அறிந்த ஒன்று. மூலிகை மருத்துவம் குறித்த அனைத்தும் போலியானவை அல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் எழுதி வந்திருக்கிறேன். கிராம வைத்தியர்கள், கவிராஜ் என அழைக்கப்படுபவர்கள், ஒவ்வொரு செடியின் இயல்பையும் உங்களுக்கு சொல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு கொஞ்சம் பயிற்சி அளிக்கப்பட்டால் அவர்களும் பெரும் வெற்றி பெறலாம். பழங்குடியினர் உலகம் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு, இப்போது ஏன் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்? அவர்களுக்கு என்ன திருப்பி அளிக்கப் போகிறீர்கள்? அப்படியே அங்கு ஒரு காடு இருந்தால், அவர்கள் அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள்? அவர்கள் என்ன நாற்காலிகளும் மேசைகளும் செய்வதற்கு மரத்தை வெட்டப் போகிறார்களா? அவர்கள் என்ன செய்வார்கள்?

பழைய செவி வழி மரபு இன்றைய இளைய தலைமுறையினரிடையே இன்னமும் பழக்கத்தில் இருக்கிறதா?

அது ஒன்றுதான் இப்போது உயிருடன் இருக்கிறது. ஆனால், இன்றைய தலைமுறையைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அவர்கள் எப்படி அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்திருக்க முடியும்? அவர்கள் காடுகளில் வாழ்வதில்லை. நகரங்களுக்கு வருகிறார்கள். கிராமங்களில் வாழ்பவர்களுக்கும் பழைய மாதிரியான கிராமங்கள் இல்லை. பழைய மாதிரியான காடுகளும் இல்லை. பழைய மூலிகைகள் இல்லை. பழைய உணவு இல்லை.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான சர்ச்சை கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில், இந்த இளைய தலைமுறையினரின் நிலை என்ன?

அந்தப் போராட்டங்கள் முற்றிலும் வேறுபட்டவை. இந்த மக்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை. நான் அதைச் சொல்ல முடியாது. மேற்கு வங்கத்தில் இரு சமூகங்கள் மேதினிபூரைச் சேர்ந்த "லோதா'க்களும், ஜால்பாய்குரியைச் சேர்ந்த "தோதோ'க்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு 5 "தோதோ' மாணவர்கள் "மத்திமிக்' தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஒருவர் மேல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். "லோதா' சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனும் பெண்ணும் மிகச் சிறப்பாக முதல் வகுப்பில் தேர்வு பெற்றிருக்கின்றனர். இந்தப் பையன் எவ்வாறு மேலே படிப்பான்? நாங்கள் அவனுக்காக முயற்சி எடுக்க வேண்டும். செய்வோம். உள்ளூர் கல்லூரி ஒன்று அவனுக்கு இடம் கொடுத்துள்ளது. அது மோசமான கல்லூரி அல்ல. அங்குள்ள ஆசிரியர்கள் அவனுக்கு தங்கும் விடுதியில் இடத்திற்கு ஏற்பாடு செய்ததோடு அவனது செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த மக்களில் இருந்து மருத்துவர்களும் பொறியாளர்களும் வரவில்லையெனில் என்ன பயன்? மரங்களும் காடுகளும், பூச்சிகளும் பறவைகளுமே தங்கள் வாழ்க்கையாகக் கொண்ட இந்த மக்களுக்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்பட மாட்டாது. ஆனால், பொது சமூகத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் மட்டும் மேல் படிப்பிற்குச் செல்வார்கள். இது எவ்வாறு இந்த நாட்டிற்கு நன்மை பயக்கும்? இந்தியா இன்றும் பொது சமூகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல. சாலை போடுபவர்களும், விவசாயிகளும், மரம் நடுபவர்களும், இந்த ஆண்களும் பெண்களும் பொது சமூகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் அதை செய்கிறார்கள், ஆனால் தினக் கூலிக்கு.

முற்றிலும் தோற்றுப்போன நமது கல்வி முறையில்தான் தவறு உள்ளது. ஆரம்பக் கல்வி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும்கூட எதுவும் தெரிவதில்லை. நாங்கள் வளரும்போது, சாதாரண பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்குக்கூட சரியான ஆங்கிலம், சரியான வங்காளம், சரியான கணக்கு தெரியும். அது இனி இல்லை. குறிப்பிட்ட பள்ளிகளுக்கு செல்லாமல் உங்களுக்கு எதுவும் தெரிவதில்லை. சாதாரண மக்களிடமிருந்து கல்வி பறிக்கப்பட்டு விட்டது.

இறுதியாக ஒரு கேள்வி. நீங்கள் நீண்ட காலமாக களத்தில் நிற்கிறீர்கள். புதிதாக களத்திற்கு வரும் இளைய தலைமுறையினரை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

நான் எந்த இடைவெளியையும் வேறுபாட்டையும் காணவில்லை. புதியவர்கள் வருகிறார்கள். நான் இங்கு அமர்ந்து கொண்டு வேலைக்கு ஆள் எடுப்பதில்லை. விரும்புகின்றவர்கள் வந்து என்னை சந்திக்கிறார்கள். ஆர்வம் மட்டும் போதாது, அதைத் தொடர்ந்து செய்வார்களா? தொடர்ந்து பணி புரிபவர்கள் அனைவரும் பழங்குடியினர் அல்ல. பெரும்பான்மையானவர்கள் நகரங்களில் இருந்து வந்தவர்கள். ஆனால், அவர்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள். அது மிகவும் நன்றாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.
தலித் முரசு 2006