காட்டு நாயக்கர்கள் ( Kattu Nayakargal )
இவர்கள் நீலகிரியிலுள்ள கூடலுர் வட்டாரத்தில் வாழ்கின்றனர். இவர்களை ஓணக்கடி என்றும் அழைக்கின்றனர். நல்ல உயரமும் கருத்த நிறமும் சுருண்ட மயிரும் உடையவர்கள். பெண்கள் நீண்ட மூக்கும் வட்ட வடிவ முகமும் உடையவர்கள். ஆண்கள் வேட்டியும் பெண்கள் மார்பகம் வரை சேலையும் கட்டுகிறார்கள். காட்டு நாயக்கன் என்றால் காடுகளின் தலைவன் என்று பொருள். இவர்கள் குரங்கின் மாமிசம் உண்பார்கள். காட்டுப் பொருட்களைச் சேகரித்து வாழ்க்கை நடத்துகின்றனர். மாட்டிறைச்சி தவிர எல்லா இறைச்சி வகைகளையும் உண்கின்றனர். சிலர் காட்டிலக்காவின் அடிவாரத்தில் வாழ்கின்றனர். இவர்களால் ஆயிரம் வரை எண்ண முடிகிறது.
இவர்கள் தந்தை கால்வழியமைப்பைப் (patrilineal) பின்பற்றுபவர்கள். ஒவ்வொரு குடியிருப்புக்கும் பெருந்தனக்காரன் ஒருவன் உண்டு. திருமணம், விவாகரத்து போன்றவற்றிற்கு அவனது அனுமதியைப் பெற்றேயாக வேண்டும். இவர்களிடையே நடைபெறும் வழக்குகளை ஐவர் கொண்ட பஞ்சாயத்தார் தீர்த்து வைக்கின்றனர். இவர்கள் வீட்டை மனை என்றும் கொன்மாரி என்றும் சொல்வர் இயற்கையை வழிபடுகின்றார்கள். பேய் பிசாசுகளிலும் இவர்களுக்கு நம்பிக்கை யுண்டு. பைரவன் என்ற பெயரால் சூரியன், சந்திரன் ஆகியவற்றை வழிபடுகிறார்கள். மஸ்தியையும் மாலதெய்வத்தையும் விரும்பி வழிபடுகிறார்கள். பெரும்பாலும் கோயில்களுக்குச் செல்வதில்லை. ஆனால் விழா கொண்டாடுகிறார்கள். மாரியம்மனுக்கு கோழி முதலியவற்றைப் பலி இடுகின்றனர். மிஸ் பண்டிகை என்பதை இவர்கள் ஏப்ரலில் கொண்டாடுவர்.
பூப்பு நீராட்டு விழாவில் விருந்து நடனமும் நடைபெறும், மாமனார் வீட்டில் பணி செய்து திருமணம் செய்யும் வழக்கம் இவர்களிடையே உண்டு. வெளியாட்களுடன் பெண்கள் தொடர்பு கொண்டால் அவ்வினத்தை விட்டே நீக்கி விடுவர். விவாகரத்தானவரும் மனைவியை இழந்தவரும் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்வதுடன் காமக்கிழத்தியரையும் வைத்துக் கொள்ளலாம். திருமணத்தன்று குலதெய்வத்திற்குப் பூஜை செய்கிறார்கள். விதவைகள் தங்களுக்கு விருப்பனானவர்களுடன் விவாகம் செய்வது தற்பொழுது குறைந்து வருகிறது. இறந்தவர்களைத் தாங்கள் வசிக்கும் இடத்திற்கருகிலேயே புதைக்கின்றனர். திருமணமாகாதவரது ஆவி தீங்கு விளைவிக்கும் என நம்புகின்றனர்.
குறும்பர்கள் ( Kurumbargal )
நீலகிரியில் பெட்ட குறும்பர், முள்குறும்பர், ஜேனு குறும்பர், ஹாலு குறும்பர் எனப் பலவகைப்பட்ட குறும்பப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். புதுக்கோட்டை, தர்மபுரி மாவட்டங்களிலும் குறும்பர்கள் வாழ்கிறார்கள். குறும்பர்கள் நடாண்ட இனம் என்றும் பல்லவ வம்சத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கருத்து நிலவுகிறது. குறும்பர் கிராமங்களை மொட்டா என்றும் கோம்பை என்றும் சொல்கிறார்கள். இவர்கள் மண்ணால் கட்டப்பட்டு மூங்கிலால் வேயப்பட்ட குடிசைகளில் வசிக்கின்றனர். குறும்பர்களில் மிகப் பழமையானவர்கள் பெட்டக்குறும்பரும் ஜேனுக்குறும்பருமாவர். பெட்டக் குறும்பர் நீலகிரியில் கூடலுர் வட்டாரத்தில் வசிக்கின்றனர். ஆண்கள் சிறு கொண்டைப் போட்டு, கையில் பித்தளைக் காப்பு அணிந்திருப்பர். மலையாளப் பெண்களைப் போல பெட்டக் குறும்பப் பெண்கள் மார்பு வரை ஆடை அணிகின்றனர். சிலர் பச்சையும் குத்தியுள்ளனர். கழுத்தில் கறுப்பு மணிச்சரமும் காதில் ஓலைச் சுருளும் அணிந்திருக்கின்றனர். பெட்டக் குறும்பரிடையே காதலித்து திருமணம் செய்வது நிலவுகிறது. பெரும்பாலும் பெண்கள் பருவடைந்த பின்புதான் திருமணம் செய்கின்றனர். விதவைகள் மறுமணம் செய்து கொள்ளலாம். பஞ்சாயத்தார் மூலம் விவாகரத்து பெறப்படுகிறது. இறந்தவர்களைப் புதைக்கின்றனர். பெட்டக்குறும்பர்களிடையே ஆனே, பேவினோ, கொள்ளி என மூவகைப் பிரிவுண்டு. காட்டுப் பொருட்களைச் சேகரித்தும், வேட்டையாடியும், கூலி வேலை செய்தும் பிழைக்கின்றனர். பொம்மன், மாரி போன்ற தெய்வங்களை வணங்குகின்றனர். இவர்கள் பேசுவது பெட்டக் குறும்பா எனும் தனி மொழியாகும். மற்றக் குறும்பர்கள் பேசுவது கன்னட மொழியின் கிளை மொழியாகும். குறும்பர்கள் குழல் வாசிப்பதில் சமர்த்தர். குழல்களைத் தாமே செய்து கொள்கின்றனர்.
முள் குறும்பர்கள் நீலகிரியில் வாழ்கிறார்கள். தோற்றம், மொழி, பண்பாடு, வாழும் விதம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் முள் குறும்பர்கள் மற்றக் குறும்பர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். முற்குறும்பர்கள் கருத்த நிறமும் நடுத்தர உயரமும் நீண்டு அகன்ற மூக்கும் உடையவர்கள். ஆண்கள் மலையாள நாயர்களைப் போன்று தலைமுடியை இடப்புறத்தில் முடிச்சுப்போட்டுக் கொள்கிறார்கள்.
படகர்கள் ( Padakargal )
நீலகிரியில் மிகப் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் படகர் பழங்குடி மக்கள். இவர்கள் மாவ் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பல நுற்றாண்டுகளுக்கு முன்பு மைசூரிலிருந்து வந்து நீலகிரியில் குடியேறியவர்கள். இதனால் படகரை வடுகர் (வடக்கிலிருந்து வந்தவர்) என்றும் அழைப்பர். இவர்கள் கொச்சைக் கன்னடமும் தமிழும் கலந்து பேசுகிறார்கள். கோத்தர்கள் குடிகொண்டுள்ள பகுதிகளைச் சுற்றி படகர்கள் வாழ்கின்றனர். படகர்கள் கொண்டாடும் விழாக்களுக்குக் கோத்தர்கள் இசைக்கருவி வாசிப்பவர்களாக உள்ளனர். கோத்தர்களின் விழாக்களுக்குப் படகர்கள் மேளதாளங்களுடன் மரியாதையாக அழைக்கப் படுகின்றனர். படகர்கள் வாழ்க்கைத் தரம் கூடியவர்களாகவும் எண்ணிக்கையில் கூடியவர்களாகவும் விளங்குகின்றனர்.
படகர்களது குலதெய்வம் இருடையா என்றும் மாலிங்கா என்றும் வழங்கப்படுகிறது. எத்தை என்று சக்தியை வணங்குகிறார்கள் சிவனையும் வழிபடுகிறார்கள். ஜூலையில் இருடையா தெய்வத்திற்கு விழா எடுத்து அறுவடை நடத்துகிறார்கள். உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் கிடையாது. திருமணம் பெரியவர்கள் ஏற்பாட்டின் படியே நடைபெறுகிறது. குழந்தை பிறந்தால் பெரும்பாலும் பாட்டன் அல்லது பாட்டியின் பெயரையே வைப்பர். யாரேனும் இறந்தால் ஊரிலுள்ள ஆண்களும் பெண்களும் பாடல் பாடிக் கொண்டே சுடுகாடு செல்வர். இவ்வாறு எல்லா வகையிலும் படகர்கள் ஒன்று கூடி ஒரே சமுதாயமாக வாழ்கின்றனர்