Wednesday, September 3, 2008

பணியர்கள் ( Paniyargal )

பணியப் பழங்குடி மக்கள் உதகை மலை கூடலுர் வட்டாரத்தில் ஆங்காங்கே சிதறுண்டு வாழ்கின்றனர். கருத்த நிறமும், தடித்த உதடும், சுருண்ட மயிரும், பருத்த மூக்குமுடையவர்கள். ஆண் பெண் இருபாலாரும் காதணி அணிகிறார்கள். பெண்கள் காதில் நீண்ட வட்ட வடிவமான ஓலைகளை அணிகிறார்கள். பெண்கள் மார்பை மறைக்க கச்சை அணிகிறார்கள். இவர்கள் தமிழ்ச் சொற்கள் நிறைந்த மலையாளக் கிளை மொழி ஒன்றைப் பேசுகிறார்கள். இவர்கள் நீக்ராயிட் இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் உருவத்தோற்றத்தைப் பார்க்கும் போது ஆப்பிரிக்க, கபீர் பழங்குடிகளை ஒத்துள்ளனர் என்று உருவத் தோற்ற மானிடவியலார் கூறுகின்றனர். இவர்கள் தந்தவழி அமைப்பைப் பின்பற்றுகின்றனர்.

இவர்கள் வாழும் குடிசையைச் சாலை என்றும், கிராமத்தைப் பாடி என்றும் கூறுகின்றனர். கிராமப் பெருந்தனக்காரரை மூப்பன்மார் என்றழைக்கின்றனர். எல்லா வழக்குகளையும் பஞ்சாயத்தார்தான் தீர்க்கின்றனர். பணியர் கடும் உழைப்பாளிகள். பெரும்பாலும் எல்லா மக்களும் கூலி வேலை செய்தே பிழைக்கின்றனர். நீரை விஷமாக்கி மீன்பிடிக்கின்றனர். கருங்குரங்கின் இறைச்சியை விரும்பி உண்கின்றனர். பேய் வழிபாடு இவர்களிடையே உண்டு முன்னோரது ஆவியை பெனா என்றழைக்கின்றனர். கூளி என்ற தெய்வத்தை வழிபடுகின்றனர். கூளி தெய்வத்திற்குப் பூஜை போடும் போது கோமரம் என்ற தெய்வத்தின் பெயரால் அசரீரி சொல்வதுண்டு. சூன்ய முறையும் இவர்களுக்குத் தெரியும். காட்டு பகவழியையும் சனீஸ்வரனையும் வழிபடுகிறார்கள்.

இவர்கள் ஒருதார மணத்தை பின்பற்றுகிறார்கள். மணைவியை இழந்தவர்களும் விதவைகளும் மறுமணம் செய்து கொள்ளலாம். இவர்களிடையே ஓடிப் போய் திருமணம் செய்கின்ற உடன் போக்குத் திருமணமும் உண்டு. மூப்பன்மார் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. வருங்கால மாமனார் வீட்டில் பணி செய்து திருமணம் செய்வதும் உண்டு. ஒவ்வொரு வருடமும் மாப்பிள்ளை மணப்பெண்ணின் தந்தைக்கு கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டும். இதற்குத் தலப்பாட்டம் என்று பெயர். மாமனார் இறந்தால் மாமியாருக்குக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்தால் பத்து நாட்களுக்குத் தீட்டு அனுஷ்டிக்கின்றனர். இவர்கள் குழந்தைகளைத் தொட்டிலில் படுக்க வைப்பதில்லை.

பிணத்தை வடக்கு தெற்காக வைத்து புதைக்கின்றனர். இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய விருந்து நடனமும் நடைபெறும். ஓணம், விஷு, யுகாதி, சங்கராந்தி போன்ற விழாக்களையும் கொண்டாடுகிறார்கள்.

தோடர்கள் ( Thodargal )

இவர்கள் பல நுற்றாண்டுகாலமாக தமிழகத்தில் நீலகிரி மலையில் வாழ்ந்து வருகிறார்கள். தோடர்களது வாழ்க்கை எருமையைச் சுற்றியே சுழல்வதால் இவர்கள் 'எருமையின் குழந்தைகள்' என்றழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் மட்டுமின்றி உலகத்திலேயே
உள்ள பழங்குடிகளுள் நீலகிரி தோடர்கள் (தொதவர், தோதவர்) தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி மலை, உதகமண்டலம், கூனுர் பகுதிகளில் மட்டும் தான் காணப்படுகின்றனர்.

தோடர் வரலாறு :

1602 ஆம் ஆண்டு கொச்சி சிரியன் கிறிஸ்துவப் பாதிரியார் ஃபெர்ரிரி என்பவர்தான் முதன்முதலில் தோடர்களைக் கண்டு பிடித்தார். அதைத் தொடர்ந்து உலகின் கவனத்தையே தோடர்கள் கவர்ந்தனர். டாக்டர் போப் என்பவர் 'தொழுவன்' (மந்தையு டையவன்) என்ற தமிழ்ச் சொல்லிருந்து தொதுவன் என்று பெயர் ஏற்பட்டதாக கூறுகிறார். மைசூர் மன்னன் விஷ்ணுவர்த்தன் நீலகிரியைக் கைப்பற்றியதாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. முதன்முதல் தோடர்களைப் பற்றி இக்கல்வெட்டில்தான் குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1117. எனவே கி.பி.12 ஆம் நுற்றாண்டிலே தோடர்கள் நீலகிரியில் இருந்தனர் என்பதை அறிகிறோம். இவர்கள் தங்களை பஞ்ச பாண்டவ வம்சம் எனக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். இவர்களது நாட்டுப் பாடல்களிலும் பஞ்ச பாண்டவ வம்சம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதற்கேற்ப ஒரு பெண்ணை பல ஆண்கள் மணக்கின்ற வழக்கமும் (polyandry) இவர்களிடையே உண்டு. தோடர்களது பண்பாடு, பழக்க வழக்கங்களை ஒப்பிடுமிடத்து இந்துக்களுக்கும் தோடர்களுக்கும் இடையே பல வகைகளில் ஒற்றுமையையும் மற்றும் மத சம்பந்தமான சடங்குகளில் வேற்றுமையையும் காண்கிறோம்.

உடல் அளவுகளைக் கொண்டு (Anthropmetri data) தோடர்கள் தொல்மத்தியத்தரைக்கடல் இனத்தைச் சார்ந்தவர்கள் (protomediterranean) என்று மானிடவியல் அறிஞர் டாக்டர் அய்யப்பன் கூறுகிறார். இக்கருத்தை அறிஞர் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். தோடர்கள் நீலகிரியிலேயே பிறந்து வளர்ந்த பழங்குடி மக்களாவர். பல நுற்றாண்டு காலமாக தனித்து வாழ்ந்த வாழ்க்கையின் பலனாகப் பல சிறப்புத் தன்மைகளை அவர்களிடம் காண்கிறோம். தோடர்களில் ஆண்கள் சிவந்த தாமிர நிற மேனியுடையவர்கள் பெண்களின் மேனி இன்னும் அழகான தாமிரப் பொன் நிறமானது. தோடர்களுள் ஆண்கள் ஐந்து அடி ஏழு அங்குல உயரமும், பெண்கள் ஐந்து அடி ஒரு அங்குல உயரமும் உள்ளவர்கள். இவர்களுடைய தலை நீளமானது. உயர்ந்து வளைந்த மண்டையோடு உடையது. பொதுவாக நீண்ட முகமும் நீண்ட எடுப்பான மூக்கும் உடையவர்கள். ஆண்கள் தம் மீசையையும் தாடியையும் எடுக்கும் வழக்கம் இல்லை. முக்கியமான சடங்குகளின் போதுதான் தாடி மீசையை எடுக்கிறார்கள். ஆண்களுக்கு மார்பு, கை, கால் எங்கும் அடர்த்தியான மயிர் உண்டு. ஆண் தோடர்கள் கம்பீரமான தோற்றமும், சுறுசுறுப்பான நடையும், உடலுறுதியும் உள்ளவர்கள். முரட்டுத்தனமான எருமைகளைத் துரத்திப் பிடிக்கும் பலமுடையவர்கள். தினமும் முப்பது மைல் துரம் கால் நடையாக மூட்டைகளைத் துக்கிக் கொண்டு சிறிதும் சலிப்பின்றி நடக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். இவர்கள் பிறரைக் கண்டு பயப்படுவதும் கூச்சப்படுவதும் இல்லை. பொறுமையும் சாந்தமும் தன்னம்பிக்கையும் சினேக பாவமும் நிறைந்தவர்கள்.

தோடர் மொழி :

தோடா மொழி தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். பெரும்பாலான இந்தியப் பழங்குடிகள் தங்கள் மொழியை ஆள்பாஷை என்று அழைப்பது போலவே தோடர்களும் அழைக்கின்றனர். இம்மொழி பேசும் தோடாப் பழங்குடிகள் நீலகிரிக்குக் கிழக்குப்பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் தமிழும், மேற்குப் பகுதியில் மலையாளமும், வடக்குப் பகுதியில் கன்னடமும் பேசுகின்றவர்களுக்கு நடுவே வாழ்கின்றனர். இவர்களின் தனித்த
வாழ்க்கையால் எந்த மொழியின் செல்வாக்கினையும் இம்மொழியில் காண முடியாது. இம்மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. ஆனால் வாய்மொழி இலக்கியங்கள் (oral literature) நிறைய உண்டு. தோடர்களால் இலட்சங்கள் வரை எண்ண முடிகிறது. இது தோடா மொழியின் வளர்ச்சியையும் அதை பேசும் மக்களின் பண்பாட்டு வளர்ச்சியையும் காட்டுகிறது. ஏனெனில் அந்தமான் தீவில் வாழும் ஒங்கே பழங்குடி மக்களால் மீண்டும் மீண்டும் மூன்று வரைதான் எண்ண முடிகிறது. இது அவர்களது பழமை நிலையைக் காட்டுகிறது.

பெர்னார்ட் ஸ்மித் (1837) ரக்கரெட் (1848), டாக்டர் கால்டுவெல் (1856) ஜே. ஸார்ட்த் (1868), கிரீயர்ஸன் (1906) போன்ற மேனாட்டு அறிஞர்கள் தோடா மொழி தமிழின் கிளை மொழியே என்று குறிப்பிட்டுள் ளார்கள். மானிடவியல் அறிஞர் டாக்டர் அய்யப்பன் போன்றோரும் தோடர்மொழி கன்னடத்தைக் காட்டிலும் தமிழோடு மிக நெருங்கியத் தொடர்புடையது என்று குறிப்பிடுகிறார். டாக்டர் ஆப்பர்ட் தோடர்கள் பேசும் மொழி தெலுங்கின் கிளை மொழி என்கிறார். டாக்டர் மேட்ஜ் (1864) தோடர்கள் பேசுவது கன்னடமொழியின் ஒரு வகை என்கிறார். பேராசிரியர் எமனோ (Emeaneau), டாக்டர் ச. அகத்தியலிங்கம், டாக்டர் சு. சக்திவேல் போன்றோரின் ஆய்வில் தோடர் பேசும் மொழி எம்மொழியின் கிளையுமன்று அதொரு தனி தென் கிராவிட மொழியைச் சார்ந்தது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

தோடர்களின் பேச்சு மொழிக்கும், அவர்கள் பாடும் பாடல் (song) மொழிக்கும் சிறிது வேறுபாடு உண்டு. தற்காலத் தமிழின் அன்றாடச் சொற்களோடு சங்க காலத் தமிழ்ச் சொற்களான திட்டை, நஞ்சு, கூகை, உகிர், மிறு, புள், மீன், கரும்பொன், கோடு, உணங்கு, துவி, திங்கள் போன்றவையும் தோடா மொழியில் வழங்கப்படுகின்றன. தோடர்கள் மூன்று வகையான புனித மொழியைப் (sacred language) பயன்படுத்துகின்றனர். (1) வழிபாட்டுச் சமயச் சடங்குகளுக்குரிய குவஸ்வம் எனும் மொழி (2) பால்பண்னையில் (தீ) பயன்படுத்தப் படும் புனித மொழி (3) தெய்வங்களைப் பற்றிய கதைகளில் பயன்படுத்தப்படும் தெய்வ மொழி. தமிழர்கள் குறுமொழியை (Slang) பயன்படுத்துவதுப் போன்று தோடர்களும் தமிழர் மற்றும் படகர், கோதீதர், குறும்பர், காட்டிலாகா அதிகாரிகள் முன்பு இரகசிய மொழியொன்றைப் (secret language) பேசுகின்றனர். பேச்சு மொழியில் சில சொற்களுக்கு ஒரு பொருளும் இரகசிய மொழியில் வேறு பொருளும் உண்டு.

தோடர் கால்வழி அமைப்பு இனப் பிரிவு :

தோடாப் பழங்குடி மக்களிடையே தேர்த்தாள், தெவிளியாள் எனும் இருபெரும் பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவைச் சார்ந்தவர் மற்ற பிரிவில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆனால் மற்ற பிரிவைச் சார்ந்த பெண்ணைக் காமக் கிழத்தியராக வைத்துக்கொள்வர். அப்பெண்ணின் கணவனது சம்மதத்துடனே பூக்குளி (போர்வை) பரிசளித்து தொடர்பு வைத்துக் கொள்கின்ற பழக்கம் இன்றும் உள்ளது.

தோடர்-அன்றாட வாழ்வு :

தோடர்கள் வாழுமிடத்திற்கு மந்து என்று பெயர். தோடரது குடிசை வட்ட வடிவமாய் இருக்கும். சிறியது. மரங்களாலும், மூங்கிலாலும், பிரம்பினாலும், புற்களாலும் கட்டப்பட்டிருக்கும். கோயிலின் கூரை உயரமான கூம்பு வடிவம் உடையதாய் இருக்கும். பால்பண்ணை அவர்கள் வசிக்கும் குடிசையை விட சற்றுப் பெரியதாய் இருக்கும். தோடர்கள் கேழ்வரகு, சாமை, கிழங்கு, தேன் முதலியவற்றை உண்பர். எருமைப் பாலை அதிகம் விரும்பி உண்பர். விழாக்களின் போதும், சமயச் சடங்குகளின் போதும் அனைவரும்
குடிக்கின்றனர்.

தோடர்கள் சந்திக்கும் பொழுது தங்களுக்கே உரிய முறையில் வணக்கம் செலுத்துகின்றனர். பெரியவர் ஒருவர் இளைய பெண்மணி ஒருத்தியைக் காண நேர்ந்தால் தமது பாதங்களை ஒவ்வொன்றாக மாற்றித் தன் முன்னால் அமர்ந்திருக்கின்ற பெண்ணின் சிரசில் வைக்கிறார். அவள் தன் கரத்தால் அவருடைய பாதங்களைப் பரிவுடன் பற்றிச் சுமக்கிறாள். வயதான பெண்மணியும் ஓர் இளைய ஆண்மகனும் சந்திக்கும் பொழுதும் மேற்கூறியபடி வணக்கம் செலுத்தப்படுகிறது. இதனை தோடர் மொழியில் 'கோல் மீள் விடுத்' (கால் மேல் பிடித்தி) என்பர். தோடரல்லாத மற்றவர்களைக் கை கூப்பி வணக்கம் செய்கிறார்கள்.

பஞ்சாயத்து என்பது தோடர் இனத்தின் வலிமை மிக்கதோர் அம்சமாகும். கோயில் பூசாரிகளை நியமிப்பது முதல் திருமணங்கள், விவாகரத்து, மாற்றான் மனைவியை அழைத்துச் சென்றது போன்ற விவாகரெங்களை முதியவர்கள் அடங்கிய நோய்ம் எனும் பஞ்சாயத்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குகிறது. தோடர்கள் சமயச் சடங்கு அனைத்திலும் எருமைக்கே முதலிடம் கொடுக்கின்றனர். தெய்வத்திற்கு அடுத்தபடியாக எருமையைத்தான் வணங்குகின்றனர்.
எனவேதான் எருமைகளைப் புனித எருமைகள், சாதாரண எருமைகள் என இரு பிரிவாகப் பிரித்துள்ளனர்.

தோடர்கள் எருமைகளை வளர்ப்பதையும் பால் கறப்பதையும் ஒரு தெய்வ வழிபாடெனக் கருதி பல சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் அமைத்துப் பல நுற்றாண்டுகளாக அனுசரித்து வருகின்றனர். தோடர்கள் இறந்தவர்களை எரிக்கின்றனர். தோடர் சமூகத்தில் பெண்கள் சமயச் சடங்குகளில் கலந்து கொள்வதில்லை. கோயிலுக்கு அருகிலும் செல்லக் கூடாது. பூசாரி நடக்கும் வழியிலும் செல்லக் கூடாது.

பெண்கள் பருவமடைந்தவுடன் தனிக்குடிசையில் வைக்கின்றனர். அமாவாசைக்குப்பின் அவளைக் குளிக்கச் செய்து தீட்டுக்கழித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். அன்று விருந்தும் நடனமும் நடைபெறும். தோடர்களிடையே பெண் குழந்தை பிறந்தவுடனேயே இளவயதில் நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றொருவனை மணந்து கொண்டால் மணந்தவன் முன்பு நிச்சயிக்கப்பட்டவனுக்கு எருமைகள் கொடுக்க வேண்டும்.

பெண்கள் கர்ப்பமடைந்த ஏழாவது மாதம் வில்லம்புச் சடங்கு நடத்துகிறார்கள். இச்சடங்கை தோடர்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இச்சடங்கில் வில் அளிக்கிறவனே மரபுப்படி அப்பெண்ணுக்கு கணவனாகிறான். அவளை மணம் செய்த கணவனும் வில்லை அளிக்கலாம்; கணவனுடன் பிறந்த சகோதரரும் வில் அளிக்கலாம். வில் அளிப்பவரே அக்குழந்தைக்கும் அதன் பிறகு பிறக்கும் குழந்தைக்கும் தந்தையாகிறார். அமாவாசையன்று தான் இச்சடங்கு நடைபெறும். இப்போது பெண்களின் எண்ணிக்கை பெருகியதன் காரணம் பல்கணவர் மணம் மறைந்து பல்மனைவி மணம் அதிகரித்து வருகிறது.

தோடாப் பெண்கள் அவர்களின் பூக்குளி எனும் போர்வையை பல வண்ண எம்பிராய்டரி வேலைகள் செய்து அணிவார்கள். அவர்களுக்கென ஊட்டியில் எம்பிராய்டரி தொழில் பள்ளி ஒன்று இயங்குகிறது. கிறிஸ்துவ மதம் மாறிய தோடர்கள் பெரும்பாலும் பழங்குடி பழக்க வழக்கங்களை விட்டுவிட்டனர். தோடர்கள் இப்போது சமைத்து உண்ணும் பழக்கத்தைப் பரவலாகக் கொண்டுள்ளனர். முதிய ஆண்கள் குமண் (கோவணம்) தார்ப் (வேட்டி போன்றது) பூக்குளி (போர்வை) ஆகியவற்றை அணிந்தும் முதிய பெண்கள் தார்ப் (மார்பிலிருந்து கால்வரை நீண்ட ஆடை), பூக்குளியை அணிந்தும் வந்தாலும், இப்போது இளைஞர்கள் பேண்ட் சட்டையும், பெண்கள் பாவாடை, சேலைசட்டையும் அணிந்து வருகின்றனர். தோடர்களின் இளந்தலைமுறையினர் படிக்கும் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழக அரசினரால் ஏற்படுத்தப்பட்ட உண்டி உறைவிடப்பள்ளி இதற்கு உதவுகிறது. தோடர்கள் தொழிற்சாலை களிலும் பணி புரிகின்றனர். நீலகிரி மலையை அரசினர் மட்டுமன்றி, தனியாரும் விலைக்கு வாங்கி ஆக்ரமித்து விட்டதால், சொத்துடைமை பற்றிய கருத்து இம்மக்களிடையே ஏற்பட்டுள்ளது இதனால் பால்ய மணம், பல்கணவ, பல்மனைவி மணம் போன்ற பழக்கங்கள் மறைந்து வருகின்றன.